கர்நாடக மாநிலம் ஷிமோகா மத்திய சிறையில், அதிரடியாக அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு கைதி தன்னுடைய செல்போனை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்து விழுங்கிவிட்டார். இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
இதனை அடுத்து, சோதனை முடிந்ததும் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, எக்ஸ்ரே மூலம் அவருடைய வயிற்றில் செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதியின் சம்மதத்தை பெற்று, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த செல்போனை அகற்றினர். அகற்றப்பட்ட அந்த செல்போன் சீல் வைக்கப்பட்டு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில், சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்காக அந்த கைதி செல்போனை விழுங்கியிருக்கலாம் என்றும், அவரிடம் செல்போன் இருந்ததற்கு சிறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.