உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக இருந்த வழக்கறிஞர் மற்றும் காவலர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தை உலுக்கிய இந்த கொலை குறித்த வழக்கு இன்னும் நடந்து வரும் நிலையில் இதில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தவர் உமேஷ் பால். வழக்கறிஞரான இவர் கொலை சாட்சியமாக இருப்பதால் போலீஸ் காவல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காவலர் ஒருவர் பாதுகாப்புடன் உமேஷ் பால் துமன்கஞ்ச் என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரையும், அவருக்கு பாதுகாப்பிற்கு வந்த காவலரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது மர்ம கும்பல் உமேஷ் பாலை சுட்டுக் கொன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.