அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மீறுவதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் அவற்றுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்த சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் இந்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா மீது விதித்த வரிகளால் ஜவுளி, கைவினைப் பொருட்கள் மற்றும் ரத்தினங்கள் போன்ற துறைகள் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 40% பாதிக்கப்படாமல் உள்ளது என்று அவர் கூறினார். இந்த எதிர்மறைத் தாக்கம் தற்காலிகமானது என்றும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இந்தியா இப்போது அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால், அது எப்போதும் அடிபணிவதற்கான ஒரு ஆபத்தான முன்மாதிரியை உருவாக்கிவிடும். இந்தியா ஒரு பெரிய தேசம். அது எந்த நாட்டின் கருணையையும் நம்பியிருக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் இந்திய நிறுவனங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அஸ்வினி மகாஜன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.