சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ரௌத், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எங்கு இருக்கிறார் என்று கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜகதீப் தன்கரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக ரௌத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கர், அதன் பிறகு பொதுவெளியில் காணப்படவில்லை. இந்த சூழலில், அவர் தனது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பாதுகாப்பு குறித்து டெல்லியில் வதந்திகள் பரவி வருவதாகவும் சஞ்சய் ரௌத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் துணை ஜனாதிபதிக்கு என்ன ஆனது, அவர் எங்கு இருக்கிறார், அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள உரிமை உண்டு என்று ரௌத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.