சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக பிரபலமான எழுத்தாளராக அறியப்படுபவர் சல்மான் ருஷ்டி. இவரது கனவின் குழந்தைகள் என்ற புத்தகம் பெரும் வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விமர்சனங்களையும், கொலை மிரட்டல்களையும் சல்மான் ருஷ்டிக்கு பெற்று தந்தது.
சல்மான் ருஷ்டி நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு வந்த நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
படுகாயத்தில் சல்மான் ருஷ்டியின் கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கண் பார்வையை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் அவருக்கு ஒரு கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு மற்றும் அவரது கல்லீரலில் சேதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதாவது, இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். சாத்தானின் வேதங்கள் அதன் காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.