Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து - மேடையிலேயே சுருண்டு விழுந்தார்

salman rushdie
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:56 IST)
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

 
புக்கர் பரிசு வென்றவரான இவர், லாப நோக்கற்ற சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.
 
 
அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர், திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 
 
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் உள்ளது.

 
அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
 
சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிக்கப்பட்டுள்ளார். சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினாலும், அவருக்கு என்ன ஆனது என்ற தகவலை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
 
இதனால் சல்மான் ருஷ்டியின் நிலைமை தொடர்பான தகவல் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

 
கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவராகவும் பல சந்தர்ப்பங்களில் தனது படைப்புகளை பாதுகாக்கும் வகையில் கருத்துக்களையும் சல்மான் ருஷ்டி வெளியிட்டு வருகிறார்.

 
நியூயார்க்கில் உள்ள செளதாக்குவா நிகழ்வில் லாப நோக்கற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கோடைகால விரிவுரைத் தொடரில் முதன்மையானதாக சல்மானின் உரை இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
சாத்தானின் வசனங்கள் வெளியானபோது என்ன நடந்தது?
 
இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 1981இல் மிட்நைட் சில்ட்ரன் என்ற புதினத்தை எழுதியதன் மூலம் புக்கர் பரிசு வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார். பிரிட்டனில் மட்டும் இவரது புத்தகம், பத்து லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்தது. ஆனால் சல்மான் ருஷ்டி, நான்காவதாக எழுதி 1988இல் வெளியிட்ட "தி சாத்தானிக் வெர்சஸ்" (சாத்தானின் வசனங்கள்) - அவர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தலைமறைவு வாழும் நிலைக்கு அவரைக் கட்டாயப்படுத்தியது. மனதில் பட்டதை எழுத்து வடிவில் வெளிப்படையாக பதிவு செய்யக் கூடியவராகவும், நவீனத்துவ காலத்துக்குப் பிந்தைய கருத்தாக்கங்களையும் கொண்டவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் சல்மான் ருஷ்டி எழுதிய அந்த புத்தகம் சில முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியது.
 
 
காரணம், அந்த புத்தகத்தின் உள்ளடக்கம், தெய்வ நிந்தனைக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டு அதற்கு சில நாடுகளில் தடை செய்யப்பட்டது.
 
 
அந்த புத்தகம் வெளிவந்த சரியாக ஒரு வருடம் கழித்து, இரானின் மூத்த மத குருவாக அப்போது இருந்த ஆயடூலா ருஹோல்லா கொமனேயி, சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு அழைப்பு விடுத்தார். சல்மான் ருஷ்டியை கொல்வோருக்கு 3 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதி தரப்படும் என்று அவர் அறிவித்தார்.

 
அந்த நடவடிக்கையும் அந்த காலகட்டத்தில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. அதே சமயம், அந்த புத்தகம் வெளிவந்த பிறகு ஏற்பட்ட வன்முறையில் அந்த புத்தகத்தை மொழிபெயர்த்தவர்கள் சிலர் உள்பட டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

 
கொமனேயி அறிவித்த ஃபத்வா திரும்பப் பெறப்படாத நிலையில் அது இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் இரானில் ஆளுகையில் இருக்கும் அரசு எந்த கருத்தையும் வெளியிடாமல் ஒதுங்கியே இருந்தது.
 
யார் இந்த சல்மான் ருஷ்டி?
 
இந்தியாவில் பிறந்து பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றிருப்பவர் சல்மான் ருஷ்டி. அவருக்கு மரண அச்சுறுத்தல் உள்ளதைத் தொடர்ந்து அவருக்கு பிரிட்டன் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து வந்தது. அதே சமயம், 2008ஆம் ஆண்டு வரை ருஷ்டிக்கு எதுவும் ஆகாதபோதும், ஜப்பானில் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் 1991ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.
 
2007ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசி சல்மான் ருஷ்டியின் இலக்கிய சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கி கெளரவித்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் அவர் அங்கத்தினராக தேர்வானார். டைம்ஸ் இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் இவருக்கு பதின்மூன்றாவது இடத்தை வழங்கியது.
 
2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் எழுதிய லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் என்ற புத்தகத்தை எழுதினார்.
 
2007ஆம் ஆண்டில் இந்தியாவின் ராஜஸ்தானில் சல்மான் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அப்போது அவருக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் நிலவுவதாக கூறப்பட்டதால் மாநில காவல்துறையின் வேண்டுகோளைத் தொடர்ந்து அவர் தமது பயண திட்டத்தை கைவிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தானின் தற்கொலை படைத் தாக்குதல் ...மதகுரு பலி!