பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், ஆர்ஜேடி தலைவர் சுனில் சிங், வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் அளித்த ஆணையை மீறி முடிவுகளில் முறைகேடு செய்யப்பட்டால், நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் நடந்ததை போல பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் பீகார் சாலைகளில் வெடிக்கும் என்று அவர் மிரட்டினார்.
சுனில் சிங் மேலும் கூறுகையில், 2020 தேர்தலில் தங்களது பல வேட்பாளர்கள் வலுக்கட்டாயமாக தோற்கடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஆர்ஜேடி கட்சி 140 முதல் 160 இடங்களை பெற்று, தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
இந்த பேச்சு காரணமாக, சுனில் சிங் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் நிலையில், ஆர்ஜேடி தலைவரின் இந்த எச்சரிக்கை பீகாரில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.