உத்தர பிரதேசம் ராம்பூர், முண்டியா குர்த் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக விஜேந்திரா என்ற நபர் அவரது மனைவியால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். அவரது செயல்பாடுகளுக்கு விஜேந்திரா விதித்த கட்டுப்பாடுகளே இந்த கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
விஜேந்திராவின் சகோதரர் ஜோகிந்தர் அளித்த புகாரின் பேரில், "எனது அண்ணனுக்கு (விஜேந்திரா) இரண்டு மகள்கள் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். அண்ணன் அவர்களைத் தடுக்கவோ அல்லது அறிவுரை கூறவோ முயன்றபோது, அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர். ஒருமுறை, மகள்கள் வைத்திருந்த ஒரு தொலைபேசியைப் பார்த்த அண்ணன், அவர்களைக் கண்டித்தார். அப்போது, மனைவியும் இரண்டு மகள்களும் சேர்ந்து அவரைத் தாக்கி, அடித்தவாறே எங்கோ இழுத்துச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் தலையிட்டுச் சமாதானப்படுத்திய பிறகு அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்" என்று குறிப்பிட்டார்..
விஜேந்திராவின் மனைவி கைது செய்யப்பட்டு, அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ராம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும், கொலையில் இரண்டு மகள்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய சண்டையே கொலைக்கு வழி வகுத்திருக்கலாம் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது