ரஃபேல் விமானத்தை சம்பிரதாயப்படி பெற்றுக்கொள்வதற்காக பிரான்ஸ் சென்ற ராஜ்நாத்சிங் விமானத்துக்கு பூஜைகள் செய்து அதை பெற்றுக்கொண்டார்.
பிரான்சுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய ராணுவத்துக்காக 36 ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் இந்திய விமானப்படை தினம் இரண்டும் இணைந்து வரும் இந்த நாளில் ரஃபேல் விமானத்தை பெற்று கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் சென்றார்.
அங்குள்ள அதிகாரிகளிடம் இருந்து விமானத்தை பெற்றுக்கொண்ட அவர் விமானத்தின் பாகங்களில் சந்தனம், குங்குமம் பூசினார்.ச் பிறகு குங்குமத்தால் அதில் ஓம் என்று எழுதினார். பிறகு ரஃபேலின் டயர்களில் எலுமிச்சை பழத்தை வைத்து, தேங்காய், பூ ஆகியவற்றை கொண்டு விமானத்துக்கு பூஜைகள் செய்துள்ளார்.
அதற்கு பிறகு பேசிய ராஜ்நாத் சிங் “இந்திய ராணுவத்துக்கு இது ஒரு மகத்தான நாள். வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம். தசால்ட் நிறுவனம் சொன்னப்படி சரியான காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறார்கள். இந்த போர் விமானங்கள் இந்தியாவை மேலும் வலிமையுடையதாக மாற்றும்” என கூறியுள்ளார்.