ரயில் தண்டவாளங்களில் கால்நடைகள் மோதி விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதை தடுக்க புதிய திட்டத்தை ரயில்வே செயல்படுத்த உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தினம்தோறும் பல ரயில்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு ரயில்கள் இயங்கும் தண்டவாளப் பகுதிகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், யானை போன்ற வன உயிர்கள் குறுக்கே செல்வதால் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. ரயிலும் சேதமடைகிறது.
சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மாடு மோதிய சம்பவத்தில் ரயிலின் முன்புறம் சேதமடைந்தது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முதற்கட்டமாக தண்டவாளத்தின் பக்கவாட்டில் 1000 கி.மீ தூரத்திற்கு சுவர் எழுப்ப ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், சுற்றுசுவர் அமைக்க சில டிசைன்கள் ஆலோசிக்கப்பட்டு ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாத காலத்திற்கு ஆயிரம் கிலோ மீட்டருக்கு இந்த தடுப்பு சுவர்கள் அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிசித்துள்ளார். மேலும் இந்த சுற்றுசுவர் அமைப்பது அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.