தேசப் பாதுகாப்பு மற்றும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நேருக்கு நேர் ஒரே மேடையில் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
சமீபகாலமாகவே மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான வார்த்தை மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளன. ராகுல் காந்தி ரஃபேல் விமான ஊழல் குறித்துப் பேசும் போதெல்லாம் மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது சம்மந்தமாக மற்றொரு சூடான நிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது. டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி ‘மோடிஜீ நீங்கள் 56 இஞ்ச் மார்பளவுக் கொண்டவர் என உங்கள் கட்சியினர் கூறுகின்றனர். என்னுடன் தேசப்பாதுகாப்பு மற்றும் ரஃபேல் விமான ஊழல் குறித்து ஒரு ஐந்து நிமிடம் உங்களால் விவாதிக்க முடியுமா ?.. நான் பாஜகவுக்கு ஒரு சவால் விடுகிறேன். மோடி என்னோடு ஒரே மேடையில் விவாதத்திற்கு வருவாரா ? வரமாட்டார்… ஏனென்றால் மோடி ஒருக் கோழை..’ எனக் கூறினார்.
மேலும் ‘ மோடியிடம் யாராவது தைரியமாக எதிர்த்து நின்று பேசினால் அவர் பயந்து விடுவார். அவர் முகமே அவரது பயத்தைக் காட்டிக்கொடுக்கும். இதை நான் இந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு எதிரான போராட்டத்தில் கற்றுக்கொண்டுள்ளேன். நரேந்திர மோடியின் படம் முடிந்துவிட்டது’ எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த அனல் பறக்கும் பேச்சால் டெல்லி அரசியல் பரபரப்பானக் கட்டத்தை எட்டியுள்ளது.