மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் ஒரு குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்ததாக ஆவணங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, ஆளுங்கட்சியுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதாக அவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. அதன் பின்னர் தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி பேசுகையில், "இது ஒரு ஹைட்ரஜன் குண்டு அல்ல. ஆனால், இது ஜனநாயகத்தில் வாக்காளர் பட்டியலில் எவ்வாறு மோசடி செய்யப்படுகிறது என்பதை இளைஞர்களுக்கு காட்டும் ஒரு முக்கியமான சான்று" என்று குறிப்பிட்டார்.
இந்த வாக்காளர் நீக்க முயற்சிகள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை குறிவைத்து நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் இந்த முயற்சியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.