பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கிய தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர், அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவரை பீகார் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பீகார் தேர்வாணைய பணியாளர் வாரியத்தின் சார்பில் நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இந்த தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில், அவரது உண்ணாவிரதம் இரண்டாவது நாளாக நீடித்தது. இதையடுத்து, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை வலுக்கட்டாயமாக போலீசார் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.