இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்று கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜகதீப் தன்கரின் ராஜினாமாவிற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள நிலையில், மத்திய அரசுக்கும் தன்கருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்றும், அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு அமைச்சர் கூட பங்கேற்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனங்கள், அவரது திடீர் ராஜினாமா குறித்த மர்மத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.
2027 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜகதீப் தன்கர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, 60 நாட்களுக்குள் புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் ராஜினாமா, இந்திய அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.