உபியில் உள்ள நொய்டாவில் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்ட நிக்கி என்ற பெண்ணின் வழக்கில், அவரது மாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விபினின் தாயாரும், நிக்கியின் மாமியாருமான சன்ஸ் தயாவதி, ஜிம்ஸ் மருத்துவமனை அருகே கைது செய்யப்பட்டார். தனது மகன் விபினை பார்க்க சென்றபோது அவர் பிடிபட்டதாக தெரிகிறது. ஏற்கெனவே விபின், போலீஸாரின் துப்பாக்கி சூட்டிற்குப் பிறகு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிக்கி, அவரது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது ஆறு வயது மகன் மற்றும் சகோதரி கண்முன்னேயே தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிக்கியின் ஆறு வயது மகன், "என் அம்மாவின் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி, அறைந்து, பின்னர் லைட்டர் மூலம் தீ வைத்தனர்" என்று கண்ணீருடன் கூறியுள்ளான்.
இந்த கொடூரமான சம்பவத்தை அறிந்த தேசிய மகளிர் ஆணையம், இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹட்கர், உத்தரப் பிரதேச டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், நேர்மையான மற்றும் விரைவான விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.