நொய்டாவில், வரதட்சணை கொடுமையால் கணவன் தன் மனைவிக்கு தீவைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், உயிரிழந்த பெண்ணின் ஆறு வயது மகன், தனது தாயின் மரணத்துக்குக் காரணம் தனது தந்தைதான் என்று கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துப் பேசிய அந்த சிறுவன், "என் அம்மா மேல ஏதோ ஊற்றினாங்க, அப்புறம் அவங்களை அடிச்சு, லைட்டரால் தீ வச்சிட்டாங்க," என்று தனது கண்ணெதிரே நடந்த கொடூரத்தை சொன்னான். பத்திரிகையாளர்கள், "உன் அப்பா அம்மாவை கொலை செய்தாரா?" என்று கேட்டபோது, அவன் தலையசைத்து உறுதிப்படுத்தினான்.
இந்த சம்பவத்தின் இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, பலரையும் கொதிப்படைய செய்துள்ளன. ஒரு வீடியோவில், ஒரு ஆணும் பெண்ணும் அந்த பெண்ணை தாக்கி, அவரது தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து செல்வது பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், அந்த பெண் தீக்காயங்களுடன் படிக்கட்டுகளில் மெதுவாக இறங்கி வருவது தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்துக் காஸ்னா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.