இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையால், இந்திய மக்களுக்காக சொந்தமான சமூக ஊடக தளங்களை உருவாக்க வேண்டும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது இந்தியாவில், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வெளிநாடுகளின் சமூக ஊடக தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த தளங்கள் இந்தியாவின் கலாச்சாரம், மொழி மற்றும் சமூக பழக்கவழக்கங்களுக்கு முழுமையாக பொருந்துவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.
இந்நிலையில் இந்திய இளைஞர்கள் உள்நாட்டிலேயே சமூக ஊடக தளங்களை உருவாக்குவது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், இந்தியாவின் தேவைக்கேற்ப புதிய அம்சங்களையும், பாதுகாப்பான தொழில்நுட்பத்தையும் உருவாக்க முடியும்.
இந்தியாவின் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் சமூக பிரிவுகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட தளங்களை உருவாக்க முடியும். இது இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகிற்கு எடுத்துரைப்பதோடு, பொருளாதார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும்.
பிரதமரின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. "இந்தியாவிலேயே வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற தளங்கள் இருந்தால், நம் நாட்டின் தரவுகள் நம் நாட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்" என்றும், "இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்று, இதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்" என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.