மேற்கு வங்கத்தை சேர்ந்த கோலக் மோண்டல் என்பவருக்கு ரூ.20 லட்சம் கடன் தருவதாக கூறி தொடர்புகொண்ட மோசடியாளர்கள், பல்வேறு எண்களில் இருந்து மீண்டும் மீண்டும் பேசி, அவர் உண்மையிலேயே கடன் பெற போகிறார் என்று நம்ப வைத்தனர். இறுதியில், ஆவண செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.3.8 லட்சத்தை செலுத்துமாறு வற்புறுத்தினர். அவர் பணத்தை செலுத்திய பிறகு, அனைத்து அழைப்புகளும் துண்டிக்கப்பட்டன. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடன் கிடைக்கிறது என்பதற்காக எந்தவித விசாரணையுமின்றி ஆவணங்களை சமர்ப்பிப்பது மிகவும் தவறு. கோலக் மோண்டல், தான் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் பெயரை சரிபார்த்திருந்தால் தப்பித்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிநபர் கடன் தொடர்பாக உங்களுக்கு அழைப்பு வந்தால், ஏமாறாமல் இருக்க கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்:
நிறுவனத்தை சரிபார்க்கவும்: அந்த நிதி நிறுவனத்தின் பெயரைக் கொண்டு இணையதளத்தில் தேடி பார்க்கவும். அது உண்மையாக பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமா என்பதை உறுதி செய்யுங்கள்.
முகவரியை அறியவும்: நிறுவனத்தின் உண்மையான அலுவலக முகவரி மற்றும் இருப்பிடம் பற்றிச் சரிபார்க்கவும்.
பொதுவான கருத்துக்கள்: இணையத்தில் அந்த நிறுவனத்தைப் பற்றி மக்கள் என்ன கருத்துகள் தெரிவித்துள்ளனர் என்பதைப் பார்க்கவும்.
எதையும் ஆராயாமல், அவசரப்பட்டு ஆவணங்களை பகிரவோ, பணத்தை செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நீங்கள் சைபர் குற்றத்திற்கு ஆளானால், உடனடியாக உதவி எண் 1930-ஐ அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பண மோசடி என்றால், விரைவாக புகார் அளிப்பதன் மூலம் பணத்தை மீட்கும் வாய்ப்பு உள்ளது.