ஆந்திராவில் தலித் சமூகத்தை சேர்ந்த மாமனாரும் மருமகளும் கோயிலுக்குள் நுழைந்ததால் தீட்டு ஆகிவிட்டதாகக் கூறி பொதுமக்கள் அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பிராமனப்பள்ளி எனும் ஊரில் பெட்டண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் தாய்வீட்டுக்கு சென்ற தனது மருமகளை அழைத்துக்கொண்டு ஊருக்குள் திரும்பியுள்ளார். அப்போது புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட்டுள்ளனர்.
இதனை அறிந்த ஊர்மக்கள் குடமுழுக்கு நடந்த கோயிலுக்குள் பெண் சென்றதால் தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி பெட்டண்ணாவையும் அவரது மருமகளையும் அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் தீட்டைக் கழிக்க 35 ஆயிரம் ரூபாய் கட்ட வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெட்டண்ணாவிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அவரிடம் இருந்த 5 ஆயிரத்தைப் பிடுங்கியுள்ளனர்.
இதனால் அவமானமடைந்த பெட்டண்ணா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய உறவினர்கள் இதுபற்றிக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர் புகாரை ஏற்க போலிஸார் மறுத்துள்ளனர். ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் தலையீட்டால் புகார் ஏற்கப்பட்டுள்ளது. பெட்டண்ணாவை ஊரார் அவமானப்படுத்தியதற்கு அவர் ஒரு தலித் என்பதும் காரணம் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.