கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எம்.பி அனுராக் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் நடந்த கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு ஹேமமாலின் தலைமையில் கரூர் வந்து நிலவரத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றனர். அதை தொடர்ந்து அந்த குழுவில் ஒருவரான அனுராக் தாக்கூர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குழு சார்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் “இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கீழ்கண்ட கேள்விகளுக்கான அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகள் என்னென்ன? கூட்டத்திற்கு முன்பும், பின்னரும் கூட்டத்தை ஒழுங்கப்படுத்த சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கையை எடுத்திருந்தது?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுபாடுகள் இருந்தபோதிலும் இந்த சோக நிகழ்வுக்கு வழிவகுத்த எதிர்பாராத சூழல்கள் அல்லது குறைபாடுகள் என்னென்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மாநில அரசு எடுத்துள்ள திட்டங்கள் என்ன?
இவை குறித்த பதில்களை பகிர்ந்து கொள்ளுமாறு தயவுசெய்து கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு மாநில அரசு பதில் அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edit by Prasanth.K