நெதர்லாந்து நாட்டின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்ஸிமா ஆகியோர் நேற்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.
இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிடோரை மன்னரும் ராணியும் சந்தித்து பேசுகின்றனர். இதனையடுத்து மும்பை செல்லும் நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணி, கேரளாவிற்கும் வருகை தர திட்டமிட்டுள்ளனர். இந்திய பயணத்தை முடித்துவிட்டு மன்னரும் ராணியும் வரும் வெள்ளியன்று நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது
இந்தியாவும் நெதர்லாந்தும் பல வருடங்களாக இருதரப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன். இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளில் நெதர்லாந்து தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று டெல்லியில் நடைபெறும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நெதர்லாந்து மன்னர் மற்றும் ராணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை அடுத்து நெதர்லாந்தின் முதலீடு இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது