இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ராணி இரண்டாம் எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்கு? என பார்க்கலாம்.
சமீபத்தில் இங்கிலாந்து பாரளுமன்றத்தை 5 வார காலத்துக்கு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கினார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்த இங்கிலாந்து வெளிவரவருவதற்கான ”பிரெக்ஸிட்” க்கான கெடு நெருங்கி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவே போரிஸ் ஜான்சன் இவ்வாறு செய்கிறார் என அந்நாட்டினரிடையே பரவலாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
இதனையடுத்து புதிய அரசின் கொள்கைகளை அறிவித்து ராணி இரண்டாம் எலிசபெத் பாராளுமன்றத்தில் பேசுவதற்காகத்தான் பாராளுமன்றம் முடக்கப்பட்டது என போரிஸ் ஜான்சன் கூறினார். ஆனால் அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு எதிரான இந்திய வம்சாவளி ஜினா மில்லர், அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாராளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தர்மசங்கடமாக அமைந்ததாக கூறப்படுகிறது. ஆதலால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைப்பேசி மூலம் ராணிக்கு மன்னிப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.