கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மின்வெட்டு ஏற்பட்டதால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜைன் ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், தங்களால் தேர்வு சரியாக எழுத முடியவில்லை என தேர்வர்கள் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், "தேர்வர்கள் எந்த தவறும் செய்யவில்லை. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்களால் தேர்வு சரியாக எழுத முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும்" என்று உத்தரவிட்டது.
மேலும், தேசிய தேர்வு முகமை மறுதேர்வு நடத்தி முடித்த பின்னர்தான், ஒட்டுமொத்த நீட் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.