இங்கிலாந்தில் இருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சிகளில் இந்திய அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். பின்னர் அவர் கடந்த ஆண்டு லண்டனில் பிடிபட்ட நிலையில் அவரை லண்டன் போலீசார் கைது செய்து வாண்ட்ஸ்வொர்த்' சிறையில் அடைத்தனர். மேலும் அவரை நாடு கடத்தும் வழக்கு லண்டனில் உள்ள, 'வெஸ்ட் மினிஸ்டர்' மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தன்னை நாடுகடத்துவதற்கு எதிராக அவர் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.