சமீபத்தில் இந்தியன் வங்கியில் கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் கிடையாது என்று வெளியான அறிவிப்பு குறித்து விளக்கமளிக்க மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியன் வங்கி சமீபத்தில் தங்கள் வங்கிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டது. அதில் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய காலம் வரை பணிநியமனம் வழங்கப்பட மாட்டாது.
குழந்தை பிறந்த பின் 6 வாரங்கள் கழித்து மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழை பெற்று அளிக்கும்பட்சத்தில், மறு மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல்நல தகுதியை உறுதிபடுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்தியன் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி டெல்லி மகளிர் ஆணையம் இந்தியன் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் சட்டவிரோதமானது மற்றும் சமூக பாதுகாப்பு குறியீடு 2020ன் கீழ் வழங்கப்படும் மகப்பெறு நலனுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.