நாக்பூர் நகரத்தில் சமீபத்தில் வெடித்த வன்முறையில் முக்கியப் பங்கை வகித்ததாக கூறப்படும் ஃபாஹிம் கானின் வீட்டை இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்தனர். ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு வழங்கிய நிலையில், புல்டோசர் கொண்டு 2 மாடிகள் கொண்ட அந்த வீட்டை தரைமட்டமாக்கினர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நாக்பூர் மாநகராட்சியின் உதவி பொறியாளர் சுனில் கூறுகையில், "ஃபாஹிம் கான் சட்டவிரோதமாக இந்த வீட்டை கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 24 மணி நேரத்திற்கு முன்பே அவசர நோட்டீஸ் வழங்கியிருந்தோம். கால அவகாசம் முடிந்ததையடுத்து, இன்று காலை அதிகாரப்பூர்வமாக வீடு இடிக்கப்பட்டது" என்று தகவல் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த வாரம் வெடித்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, 18 சிறப்புப் படைகளை காவல்துறை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பதற்றம் அதிகரித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்த நிலையில், இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சித் தலைவர் ஃபாஹிம் கான் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 8 பேரும் அடங்குவார்கள். மேலும், ஃபாஹிம் கான் உட்பட 6 பேருக்கு தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.