கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்தி வரும் சாதி கணக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
தங்கள் வீட்டிற்கு வந்த கணக்கெடுப்பாளர்களிடம், தாங்கள் எந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சாராதவர்கள் என்பதால், இந்த அரசு பணியில் பங்கேற்க விரும்பவில்லை என்று மூர்த்தி தம்பதியினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கணக்கெடுப்பு தங்களுக்கு பொருத்தமற்றது என்று சுதா மூர்த்தி கையொப்பமிட்ட ஒரு சுய-அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், "கணக்கெடுப்பில் பங்கேற்பது தன்னார்வ அடிப்படையிலானது; யாரையும் வற்புறுத்தவில்லை" என்று விளக்கமளித்தார்.
முன்னதாக, இந்தக் கணக்கெடுப்பு கட்டாயமில்லை என்றும், சேகரிக்கப்படும் தரவுகள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.