மும்பையை சேர்ந்த பெண் கலைஞரான துர்கா கவுடேவை நடுரோட்டில் வைத்து ஒரு மனிதர் அடித்து,உதைத்து, கழுத்தை நெறிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
துர்கா கவுடே பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஓவியர். கோவாவின் வடக்கு பகுதியில் தற்போது வசித்து வரும் இவர் கடந்த 31ம் தேதியன்று சாலிகோ கிராம பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக போன் பேசிக்கொண்டே வந்த நபர் இவரது வண்டியில் மோதியிருக்கிறார். சுதாரித்த துர்கா வந்த கோபத்தில் இடித்து சென்றவரை திட்டியிருக்கிறார்.
உடனே துர்காவின் வண்டியின் முன்னால் தனது வண்டியை மறைத்து நிறுத்திவிட்டு வந்த அந்த நபர் துர்காவை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் சராமாரியாக அடித்திருக்கிறார். கழுத்தை நெறித்து கொல்ல முயன்றிருக்கிறார். உடனே அங்கே சூழ்ந்திருந்தவர்கள் அவரை பிடித்து இழுத்து துர்காவை காப்பாற்றிடிருக்கிறார்கள். உடனடியாக இது குறித்து போலீஸில் புகார் அளித்தார் துர்கா.
போலீஸ் விசாரணையில் தாக்கியவரின் பெயர் ப்ரையன் ஃப்ராங்கோ என தெரிய வந்திருக்கிறது. போலீஸ் கைது செய்த இரண்டு நாட்களில் ஃப்ராங்கோ பெயிலில் வெளியே வந்துவிட்டார். இதுகுறித்து போலீஸிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதிலை தரவில்லை. ஆதனால் மக்களிடமே நீதி கேட்கலாம் என முடிவு செய்தார் துர்கா. தனது யூட்யூப் பக்கத்தில் ஃப்ராங்கோ தன்னை தாக்கிய வீடியோவை பதிவிட்ட அவர் ‘இப்போது ஃப்ராங்கோ வெளியே ஜாலியாக சுற்றிவருகிறார். இதை பார்க்கும் நீங்கள் இதை ஷேர் செய்து எனக்கான நீதியை பெற்றுதாருங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
துர்கா தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.