சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் குறித்து கருத்து கேட்ட பத்திரிகையாளரிடம் கோபமாக நடந்து கொண்டதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மன்னிப்பு கேட்டார்.
மோகன்லால் சமீபத்தில் தனது அறக்கட்டளை மூலம் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கேரள கன்னியாஸ்திரி குறித்த கேள்வி ஒன்றை கேட்டனர். அதனால் கோபமான மோகன்லால், 'வெள்ள நிவாரண உதவி செய்து கொண்டிருக்கும்போது, இதைப்போன்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று மோகன் லால் எதிர் கேள்வி கேட்டார்.
மோகன்லாலின் இந்த பதில் பத்திரிகையாளர்களை அதிருப்தி அடைய செய்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இதனையடுத்து மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்தபோது, சமயம் அறியாமல் அந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி தன்னை கோபப்படுத்தியதாகவும், அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை என்றும் கூறினார். மேலும் நான் வேறொரு மனநிலையில் இருந்ததாகவும், அந்த கேள்வியை எழுப்பியவரின் மனம் காயப்பட்டிருந்தால், தயவு செய்து என்னை உங்களது மூத்த சகோதரராக நினைத்து எனது மன்னிப்பை ஏற்குமாறு கேட்டு கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.