ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி – மகாராஷ்டிராவில் சோகம்

சனி, 31 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன ஆலையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 100 பேருக்கும் மேல் பணியாற்றி வந்த அந்த ஆலையில் நண்பகல் வேளையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இரசாயன ஆலை என்பதால் வேகமாக தீ அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 58 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்... அதிமுகவை அசைக்க முடியாது - ஜெயக்குமார்