Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு: "வங்கிகளை இணைத்தால் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா?"

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு:
, சனி, 31 ஆகஸ்ட் 2019 (17:59 IST)
பொதுத் துறை வங்கிகள் பலவற்றை இணைக்கும் முடிவை இந்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த இணைப்பிற்குக் காரணம் என்ன, வங்கிகளை இணைப்பதன் மூலம் அரசு என்ன செய்ய நினைக்கிறது, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஒரு பார்வை.

கேள்வி: இதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த நடவடிக்கைகள் எல்லாம் Prompt Corrective Action Framework (PCA) என்ற பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையிலிருந்து துவங்குகிறது. அதாவது, முதலீட்டு விகிதம், சொத்துகளின் தரம், லாபத்திற்கான வாய்ப்புகள் ஆகிய மூன்று அளவீடுகளின்படி, சிக்கலான நிலையில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

இந்த அளவீடுகளில் ஒரு வங்கி கீழே செல்லும்போது ரிசர்வ் வங்கி கண்காணித்து அந்த வங்கிக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும். லாபம் எடுப்பதைத் தடுப்பது, புதிய கிளைகளைத் திறப்பதை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதன் மூலம் எடுக்கப்படும். நிலைமை மிகச் சிக்கலானால், அவை வேறு வங்கிகளுடன் இணைக்கப்படும். அல்லது கலைக்கப்படும்.

பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் வராக்கடன்களின் அளவு வெகுவாக அதிகரித்ததால், கடந்த ஆண்டு 11 பொதுத் துறை வங்கிகள் இந்த PCA கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க், அலகாபாத் பேங்க், கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இதில் சில. பிறகு இவற்றில் சில வங்கிகள், இந்த ஆண்டுத் துவக்கத்தில் அந்த கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டன.

இந்த நிலையில், வங்கிகளுக்கு லாபம் வரும்போது, அவற்றுக்கு உள்ள வராக்கடன்களை அதன் மூலம் சரிசெய்ய அரசு விரும்பியது. ஆனால், ரிசர்வ் வங்கி அதற்கு முழுமையாக அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் நஷ்டத்தைச் சந்திக்கும் வங்கிகளை லாபமீட்டும் வங்கிகளுடன் இணைக்க அரசு முடிவுசெய்திருக்கிறது.

கே:இந்த நடவடிக்கை சரியானதா?

: ஒரு வங்கி நஷ்டத்தைச் சந்திக்கிறதென்றால், அதன் வராக்கடன்களை வசூலித்து, தேவையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து லாபமீட்டும் வங்கியாக மாற்றுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

பதிலாக, வேறு ஒரு லாபமீட்டும் வங்கியுடன் இணைப்பதால், அந்த வங்கியின் லாபம், இந்த நஷ்டத்திற்கு ஈடுகட்டப்பட்டுவிடும். அதாவது, வராக்கடன்கள் வராக்கடன்களாகவே இருக்கும். வங்கிகளின் திறனை மேம்படுத்த வேண்டும். அதுதான் சரியான நடவடிக்கை.

கே:இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
webdunia

: கடந்த ஆண்டு பொதுத் துறை வங்கிகளின் லாபம் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி. ஆனால், வராக்கடன்களைச் சரிசெய்வதற்காக பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 60,000 கோடி என கணக்குச் சொல்லப்படுகிறது.

இப்போது வங்கிகள் இணைக்கப்பட்டிருப்பதால் மட்டும் உடனடியாக எந்த லாபமும் கிடைத்துவிடாது. அதிகம் உள்ள வங்கிக் கிளைகளை மூட வேண்டும், ஊழியர்களைக் குறைக்க வேண்டும். ஆனால், ஊழியர்களைக் குறைக்கப்போவதில்லை என இப்போது சொல்கிறார்கள். பிறகு அந்த நடவடிக்கையில் இறங்கினால் கடும் எதிர்ப்பு ஏற்படும்.

வங்கிக் கிளைகளை மூடும்போது, கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள வங்கிக் கிளைகள் மூடப்படும் அபாயம் இருக்கிறது.

கே:என்ன செய்ய வேண்டும்?

: இந்தியப் பொதுத் துறை வங்கிகளில் தற்போது வராக் கடன்கள் (NPA) 8-9 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. அவற்றை வசூலிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க வேண்டும். கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து சிக்கனமான செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். வங்கிகளின் திறனை மேம்படுத்தி, அவற்றை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும்.

வங்கிகள் என்பவை கடன் கொடுத்து, வட்டி பெற்று லாபம் சம்பாதிப்பவை. ஆனால், இப்போது கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருந்தாலும் பெறும் நிலையில் யாரும் இல்லை. அந்த நிலை மாற வேண்டும்.

வங்கிகளை இணைத்தால் பொருளாதாரம் எப்படி மேம்படும். ஏற்கனவே மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி இருக்கிறது. இன்னும் பெரிய பெரிய வங்கிகளை உருவாக்கி என்ன செய்யப்போகிறோம். பாரத ஸ்டேட் வங்கி பெரிய வங்கியாக இருப்பதால் குறிப்பிடத்தக்க பலன் ஏதாவது உண்டா? உண்மையில் பெரிய வங்கிகளை நிர்வகிப்பதில் சிரமங்கள் உண்டு. திறன் குறைவாக இருக்கும். சிறிய வங்கிகளே நல்லது.

செய்ய வேண்டியது, என்பிஏவைக் குறைத்து வங்கிகளை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதுதான். நஷ்டத்தைச் சந்திக்கும் வங்கிகளை லாபமீட்டும் வங்கிகளுடன் இணைப்பது அல்ல.

(செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனின் கேள்விகளுக்கு விளக்கமளித்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.)

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடித்து மக்களை ஏமாற்றிய நாய்... வைரலாகும் வீடியோ