மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தி கட்டாயம் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மராத்திய மற்றும் ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை ஹிந்தி என்ற மூன்றாவது மொழியும் கட்டாயம் மொழியாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடைமுறை, வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், தேசிய கல்வி கொள்கை திட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது மாணவர்கள் மீது ஹிந்தி திணிப்பாகும் என்று தெரிவித்துள்ளது.