மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த பாஜகவை சேர்ந்த ஒரு எம்.எல்.சி மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.எல்.சி. பிரவீன் தரேகர், வசாய் எம்.எல்.ஏ. ஸ்னேஹா தூபே-பண்டிட், மற்றும் நாலசோப்ரா எம்.எல்.ஏ. ராஜன் நாயக் ஆகியோர் திருமண மண்டபம் ஒன்றின் லிஃப்டில் சென்றபோது, திடீரென லிஃப்ட் செயல்படாமல் நடுவழியில் நின்றுவிட்டது. 15 பேர் மட்டுமே செல்லக்கூடிய அந்த லிஃப்டில் 17 பேர் பயணித்ததால், அதிக பாரம் காரணமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு லிஃப்ட் நின்றதாக கூறப்படுகிறது.
இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக லிஃப்ட் மீட்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பின், இரும்பு கம்பிகளின் உதவியுடன் லிஃப்டின் கதவு திறக்கப்பட்டு, உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று லிஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக பாரம் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், லிஃப்டில் பயணிப்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் லிஃப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.