உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை கூறியுள்ளார்.
இன்று அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் நீராட லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்த நிலையில் இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாகவும் 200க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறிய போது மகா கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ள துறவிகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்காமல் உடனடியாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகத்தரம் என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள உண்மை தற்போது அம்பலமாகிவிட்டது என்றும் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பொய் பிரச்சாரம் செய்தவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.