கேரளாவில் பல கோடி மதிப்புள்ள லாட்டரியை வென்ற பலர் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் மூலம் அரசுக்கு பல கோடி வருமானம் கிடைத்து வருகிறது. அவ்வபோது ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலங்களில் பம்பர் லாட்டரிகளும் அறிவிக்கப்படுகிறது. அதில் குலுக்கல் முறையில் தேர்வாகும் லாட்டரி சீட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் அறிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்கள் முன்னர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அவ்வாறாக பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி வென்றார். அது பத்திரிக்கைகள், செய்திகளில் வெளியாகி அவர் பிரபலம் ஆனார். அதை தொடர்ந்து அவரது உறவினர்களும், நண்பர்களும் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் வீட்டை விட்டு தப்பி தலைமறைவான அந்த டிரைவர் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த திருச்சூர் சிறப்பு லாட்டரியில் ஒருவர் ரூ.10 கோடி வென்றுள்ளார். ஆனால் அவர் நேரடியாக லாட்டரி அலுவலகத்திற்கே சென்று தனது பெயர் விவரங்களை வெளியிடாமல் பரிசுத்தொகையை அளிக்குமாறு கேட்டுள்ளாராம்.
அதேபோல கிறிஸ்துமஸ், புத்தாண்டில் பம்பர் லாட்டரி வென்றவர்களும் தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என மன்றாடியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் விருப்பத்தின் படி அடையாளம் வெளியிடப்படாது என லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.