மாதவிடாய் காலங்களில் கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு மாதம்தோறும் ஏற்படும் மாதவிடாய் போக்கு அவர்களுக்கு பெரும் சிரமமானதாக உள்ளது. உதிரபோக்கு காரணமாக பொதுவெளிகளில் சென்றால் கூட கூடுதல் பதற்றத்துடனேயே அவர்கள் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளிலேயே சானிட்டரி நாப்கின் வழங்குதல் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் கல்லூரி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் கால விடுப்பு அளிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கொச்சின் பல்கலைக்கழகம் மாணவிகளுக்கான மாதவிடாய் விடுப்பை கணக்கில் கொண்டு அவர்களுக்கான வருகைப்பதிவு சதவீதத்தை 75%லிருந்து 73% ஆக குறைத்திருந்தது. இந்நிலையில் கேரள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.