ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 50 வயதான ரேணு அகர்வால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கை, கால்கள் கட்டப்பட்டு, பிரஷர் குக்கர் மற்றும் கத்தி, கத்தரிக்கோலால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சைபராபாத்தில் உள்ள 'ஸ்வான் லேக் அபார்ட்மென்ட்' என்ற சொகுசு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்துவந்த ரேணு அகர்வால், வீட்டில் தனியாக இருந்தார். கணவரும் மகனும் மாலை 5 மணியாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர்கள் ரேணுவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், பதில் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த கணவர் ராகேஷ் அகர்வால், உடனடியாக வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், ஒரு பிளம்பரின் உதவியுடன் பால்கனி வழியாக உள்ளே நுழைந்தபோது, ரேணு அகர்வால் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
காவல்துறை விசாரணையில், குற்றவாளிகள் ரேணு அகர்வாலின் வீட்டில் இருந்து சுமார் 40 கிராம் தங்க நகைகளையும் ₹1 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த கொலையில் வீட்டு வேலைக்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.