கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த 42 நாட்களாக இந்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டபோதும், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தற்போது, 42 நாட்களுக்கு பிறகு, போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் செய்த இளம் மருத்துவர்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவை பிரிவுகளில் மட்டும், முதல் கட்டமாக பணிக்கு திரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், புறநோயாளிகள் பிரிவில் இன்னும் யாரும் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டு, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு ஏழு நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், மீண்டும் பணி புறக்கணிப்பை மேற்கொள்வோம் என்று மருத்துவர்கள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.