கேரளாவில் ஆன்லைன் மூலம் மருத்துவம் பார்த்தபோது பெண் டாக்டர் ஒருவரிடம் நிர்வாணமாக நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் சுகாதாரத்துறை இ சஞ்சீவனி என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் நோயாளிகள் நேரடியாக மருத்துவமனைக்கு வராமல் ஆன்லைன் மூலமாகவே மருத்துவரை அணுகி தங்கள் உபாதையை தெரிவித்து மருத்து பெற்றுக் கொள்ள முடியும்.
நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு மருத்துவமனை வர வேண்டியதை தவிர்க்க தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் பலரும் பயனடைந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற நல்ல திட்டங்களின் நோக்கத்தை வீணடிக்கும் விதமாக சிலர் செயல்படுவதும் உண்டு.
நேற்று முன் தினம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் இ சஞ்சீவனி திட்டம் மூலம் ஆன்லைன் மூலமாக நோயாளிகளை சந்தித்து அவர்களது உபாதைகளை கேட்டு மருந்து வழங்கி வந்துள்ளார்.
அப்போது ஆன்லைனில் வந்த திருச்சூரை சேர்ந்த முகமது சுகைப் என்ற 21 வயது இளைஞர் திடீரென தனது ஆடைகளை கழற்றிவிட்டு பெண் மருத்துவர் முன் நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர் அவரது ஆன்லைன் இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து அவர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுகைப்பை கைது செய்துள்ளனர். மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க அரசு ஏற்படுத்திய திட்டத்தில் இப்படி இளைஞர் ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.