சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேரள மாநில பட்ஜெட்டில், மலையாள சினிமாத்துறையில் பணிபுரியும் பெண் இயக்குநர்களுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள் சினிமாத் துறையில் பணிபுரியும் பெண் கலைஞர்களுக்கு ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எதிராக ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (Woman in cinema collective} என்ற அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரானப் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த அமைப்பில் உள்ள பெண் கலைஞர்கள், நடிகர் திலீப் விவகாரம் மற்றும் மேலும் சில பிரச்சனைகளில் உண்மையை வெளிப்படையாகக் கூறிய போது அதன் பின்னர் தங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகக் கூறினர். இதனால் இதுபோன்ற பெண் கலைஞர்களை ஆதரிக்கும் பொருட்டு கேரள் மாநில அரசு தனது பட்ஜெட்டில் பெண் இயக்குநர்களுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சரான தாமஸ் ஐசக் பேசுகையில் ‘இந்த மூன்று கோடி ரூபாய் என்பது பெரியத் தொகை இல்லைதான். எதிர்காலங்களில் இந்தத் தொகை அதிகரிக்கப்படும். மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களின் பங்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்தக் கலைஞர்களை நாங்கள் ஆதரிக்க விரும்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.