ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையின இந்து, சீக்கிய மதத்தினர் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்து மற்றும் சீக்கிய மதத்தினர் சிறுபான்மையினராக உள்ள நிலையில் அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் கடந்த சில நாட்களாக சிறுபான்மையின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் என்ற மாவட்டத்தில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த விஜயகுமார் என்பவரை வங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 3 நாட்கள் முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இந்து பண்டிட்டான பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நேற்று வங்கி மேனேஜர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த அதிர்ச்சி மறைவதற்கு அடுத்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு இந்த சூளைக்குள் புகுந்த பயங்கரவாத கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பீகாரை சேர்ந்த 17 வயதான தில்குஷ் குமார் என்ற சிறுவன் உயிரிழந்தார். மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வரும் இந்த தொடர் தாக்குதல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.