Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கி மேலாளர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 4 கொலைகள்

Kashmir
, வியாழன், 2 ஜூன் 2022 (15:07 IST)
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த வங்கி மேலாளரான விஜய் குமார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தாம் வேலை செய்துவந்த வங்கிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் விஜய் குமாரை, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சுட்டுக் கொன்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதத்தில், காஷ்மீரில் இப்படி குறிவைத்து கொல்லப்படும் நான்காவது நபர் இவர்.

முன்னதாக காஷ்மீரி ஹிந்துவான ராகுல் பட், முஸ்லிம் தொலைக்காட்சி பிரபலம் அம்ரீனா பட், ஜம்முவை சேர்ந்த ஹிந்து ஆசிரியர் ரஜ்னி பாலா என்பவர்கள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைகள் காஷ்மீர் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோதி அறிவித்த திட்டத்தின் கீழ் காஷ்மீருக்கு திரும்பிய காஷ்மீர் பண்டிட்கள் தங்களை மறு குடியமர்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த கொலைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீருக்கு திரும்பியவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஊழியர்கள் இருக்கும் முகாம்களை சுற்றி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

"அவர்கள் எங்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் இங்கே எப்படி வேலை செய்ய முடியும்?

அவர்கள், எல்லாம் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது என்றார்கள். எனவே நாங்கள் அரசாங்க பணிகளில் சேர்ந்தோம். ஆனால் இப்போது நாங்கள் கொல்லப்பட்டு வருகிறோம்" என பட்கமில் உள்ள ஷேக்போரா முகாமை சேர்ந்த பண்டிட் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜூன் 6ஆம் தேதிக்குள் எந்த தவறும் நடக்கா வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

பண்டிட் ஊழியர்களின் பிரதிநிதியான அஷ்வானி பண்டிட், ஜூன் 6 வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதார்.

"அரசு என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பான சூழல் வேண்டும். அவர்கள் மீண்டும் தோற்றுப் போனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் யோசிப்போம்" என்று கூறினார் அவர்.

ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 18 பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதில் ஆறு பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள்; 12 பேர் காஷ்மீரி முஸ்லிம்கள்.

1990ஆம் ஆண்டு நடந்த வன்முறையின்போது வெளியேறிய 5,000 காஷ்மீரி பண்டிட்கள் 2012ஆம் ஆண்டு பிரதமர் மோதியால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு திட்டத்தால் காஷ்மீருக்கு திரும்பினர்.

1990ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறையின்போது பல பண்டிட்கள் கொல்லப்பட்டதை 50 ஆயிரம் காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறின.
800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? – பாஜகவுக்கு சீமான் சவால்!