அக்னிபத் ராணுவ திட்டத்திற்கு ஆதரவாக பேசும் பாஜகவினர் தங்கள் பிள்ளைகளை இந்த திட்டத்தில் சேர்ப்பார்களா என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் “17 வயது இளம் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு வீரர்களாக பயன்படுத்திக் கொண்டு வெளியே அனுப்புகிறார்கள். இது ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவமானம். அக்னிபாத் திட்டத்தை நியாயப்படுத்தும் பாஜக அமைச்சர்கள் தங்களது பிள்ளைகளை அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ப்பார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.