குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்னிபத் வீரர்களுக்கு பணி வழங்க தயார் என ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் மட்டுமே ராணுவ பணி அளிப்பதால் அதற்கு பிறகு ராணுவத்திலிருந்து வெளிவருபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகரிக்கும் என போராட்டம் நடத்துபவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா “அக்னிபத் திட்டத்தின் காரணமாக நடந்த போராட்டங்கள் வருத்தத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு இந்த திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறியதை மீண்டும் கூறுகிறேன். அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறமைகள் அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாற்றும்.
அப்படியான திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா நிறுவனம் வரவேற்கிறது. அக்னி வீரர்களுக்கு கார்ப்பரேட் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.