அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பு இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி வழங்கும் திட்டம் விமர்சிக்கப்படுவது ஏன்? தெரிந்துக்கொள்ளுங்கள்..
அக்னிபாத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
# ஆள் சேர்ப்புக்கான வயது - 17 முதல் 21
# கல்வித் தகுதி - 10வது அல்லது 12வது வகுப்பு தேர்ச்சி
# பணிக்காலம் ஆண்டுகளுக்கு இருக்கும்
# நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25 சதவிகிதம் பேர் பணியில், நிரந்தரமாக்கப்படுவார்கள்.
#நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முறைப்படுத்தப்படும் ஜவான்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள்.
# முதல் ஆண்டு சம்பளம் மாதம் 30 ஆயிரம்
# 4 - ஆவது ஆண்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
கோடு
இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைவர்கள், ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனம் தொடர்பான 'அக்னிபாத்' கொள்கையை அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அக்னிபாத் திட்டத்தின் விவரங்களை வெளியிட்டார். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது என்றார் அமைச்சர்.
"இன்று நாங்கள் 'அக்னிபாத்' என்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறோம். இது நமது ஆயுதப் படைகளை மாற்றியமைத்து மேலும் நவீனப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ், இந்திய இளைஞர்களுக்கு 'அக்னிவீரர்' என்ற பெயரில் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
"நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நமது இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும், குறிப்பாக நமது இளைஞர்கள், ராணுவத்தை மரியாதையுடன் பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் நிச்சயமாக ஒப்புக் கொள்வீர்கள்.ஒவ்வொரு குழந்தையும் தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ராணுவ சீருடையை அணிய விரும்புகிறது" என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
"இளைஞர்களுக்கு, புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எளிதாக பயிற்சி அளிக்கமுடியும். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியும் மேம்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தை, இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிட முயற்சி செய்யப்படுகிறது" என்றார் ராஜ்நாத் சிங்.
'அக்னிபாத்' திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். அக்னிவீரரின் சேவையின் போது பெற்ற திறன்களும் அனுபவமும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். அக்னிவீரர்களுக்கு நல்ல ஊதிய பேக்கேஜ், நான்கு ஆண்டுகள் பணிக்கு பின் 'சேவை பேக்கேஜ், 'இறப்பு மற்றும் உடல்ஊன' பேக்கேஜிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?
'அக்னிபாத்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதில் சேரும் 25% இளைஞர்கள் பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதாவது 100ல் 25 பேருக்கு முழு நேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும்.
இத்திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அக்னிவீரராக மாறுங்கள் என்று இளைஞர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். நான்கு வருட சேவைக்குப் பிறகு தக்கவைக்கப்படும் 25 சதவிகித வீரர்கள், 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 45000 இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறினார். ராணுவத்தின் அக்னிவீரர்களில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என்றார் அவர். அக்னிபாத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்கள் , நிரந்தர வேலையை பெற ஆறு மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்.
அவர்களின் சம்பளம் சுமார் 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இந்தத் திட்டத்தை அறிவித்த ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சம்பந்தப்பட்ட அனைவருடனும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். அடுத்த 90 நாட்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தொடங்கும்.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்தியா நெடுகிலுமான, தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்புத் திட்டம் 'அக்னிபாத்' என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இளைஞர்களுக்கு ஆயுதப்படையின் வழக்கமான கேடரில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
பயிற்சிக் காலம் உட்பட 4 வருட சேவைக் காலத்திற்கு நல்ல நிதிப் பேக்கேஜூடன் பணியமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மையப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான வழிமுறைகளின் அடிப்படையில் 25% அக்னிவீரர்கள் முறைப்படுத்தப்பவார்கள். இதில் சேர ஆர்வம் உள்ளவர்கள், வழக்கமான கேடரில் ஆட்சேர்ப்புக்கு தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம்.
"அக்னிபாத் திட்டம், எல்லா அக்னிவீரர்களுக்கும் மாதம் 30,000 ரூபாய் மற்றும் நான்காவது ஆண்டில் மாதத்திற்கு 40,000 ரூபாய் வரை நல்ல மாத ஊதியத்தை வழங்கும். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தபிறகு இதில் சேர்ந்த அனைவருக்கும், 'சேவா நிதி' என்ற ஒட்டுமொத்த நிதி பேக்கேஜூம் உள்ளது," என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவமாக மாற்ற அக்னிபாத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். ராணுவத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.
ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இந்திய இளைஞர்களிடையே மிக நீண்ட நாட்களாக வலுவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலி பதவிகளுக்கு திறந்தநிலை ஆட்சேர்ப்புக்காக 100 க்கும் மேற்பட்ட முகாம்களை ராணுவம் நடத்துகிறது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான விமர்சனம்
அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை 'டூர் ஆஃப் டூட்டி' என்று அழைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள எஸ் ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த அனித் முகர்ஜி, "தொழில்முறை வீரர்களுக்குப் பதிலாக குறுகிய கால வீரர்களை நியமித்தால், அது திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பிபிசியிடம் கூறினார்.
கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங், இந்த திட்டம் குறித்து உற்சாகமாக இல்லை. குறைந்த காலத்திற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்தால், 24 வயதாகும்போது அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள். இது நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தையே அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"ராணுவப் பயிற்சி மேற்கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை உண்மையிலேயே நீங்கள் படையில் இருந்து வெளியேற்ற விரும்புகிறீர்களா? ஏற்கனவே வன்முறை அதிகரித்துள்ள அதே சமூகத்திற்கு இந்த இளைஞர்கள் மீண்டும் வருவார்கள். இந்த முன்னாள் ராணுவ வீரர்கள், போலீஸ் மற்றும் காவலராக மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சி எடுத்துள்ள வேலையில்லாத இளைஞர்களின் 'போராளிகள் குழு' உருவாகிவிடுமோ என்பதே எனது அச்சம்" என்று கூறுகிறார் சுஷாந்த்.