பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டிலும் கர்நாடக அரசின் சார்பில் எந்தவித வங்கி கணக்கையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளிலும் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள வைப்புத் தொகைகள், முதலீடுகள் ஆகியவற்றை கர்நாடகா அரசின் துறைகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மற்றும் பிற நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இந்த இரு வங்கிகளில் வைப்புத்தொகை முதலீடு எதுவும் செய்யக்கூடாது என்றும் அந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை உடனே மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கர்நாடக தொழில் பகுதி வளர்ச்சி வாரியம் 12 கோடி ரூபாய் செலுத்தி இருந்த நிலையில் அந்த பணத்தை திருப்பி கேட்டால் வழங்கப்படவில்லை என்றும் வங்கி அதிகாரிகளுடன் நடத்திய கூட்டமும் பயனளிக்கவில்லை என்றும் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் பாரத ஸ்டேட் வங்கியில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் செலுத்திய 10 கோடி ரூபாயும் வங்கி அதிகாரிகளின் முறைகேடுகளால் திரும்ப கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.