பெங்களூர் நகரை 5 மண்டலங்களாக பிரிக்கும் கிரேட்டர் பெங்களூர் ஆளுமை என்ற மசோதாவுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூரு நகரத்தை 3 டயர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் மசோதாவை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்ய கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் 5 மண்டலங்களாக பிரித்து மறுசீரமைக்க கிரேட்டர் பெங்களூரு ஆளுமை மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பெங்களூரு நகரம் 5 மண்டலங்களாக உருவாக்கப்படும் என்றும் மூன்றடுக்கு கட்டமைப்பால் நிர்வாகம் செய்யப்படும் என்றும் முதல்வர், முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் வார்டு கமிட்டிகள் பெங்களூர் நகரத்தின் நிர்வாகத்தை கவனிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த மசோதாவின்படி பெங்களூர் பகுதி முழுவதும் மிகவும் கட்டமைக்கப்பட்ட திறமையான அமைப்பின் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அமைப்பின் முழு பொறுப்பையும் முதலமைச்சர் மற்றும் பெங்களூர் வளர்ச்சி துறை அமைச்சர் தலைமை தாங்குவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் இது குறித்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது என்றும் விரைவில் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு முழு அளவில் பெங்களூரு கட்டமைப்பு பணிகள் சீர் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.