உத்தர பிரதேசத்தில் ஃபார்மஸி கல்லூரி ஒன்றில் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதி வைத்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாஸ் மார்க் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரில் உள்ளது வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தில் ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ள நிலையில் சமீபத்தில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்வில் குளறுபடி உள்ளதாகவும், ஆசிரியர்கள் பணம் வாங்கிக் கொண்டு பாஸ் போடுவதாகவும் குற்றம் சாட்டிய அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், தேர்வெழுதிய மாணவர்கள் சிலரின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன.
அப்போது விடைத்தாள்களில் எழுதியிருந்தவை சரிபார்த்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் மாணவர்கள் பக்கத்திற்கு பக்கம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை எழுதியுள்ளனர். மேலும் பல பகுதிகளில் கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டவர்களின் பெயரையும் எழுதி வைத்துள்ளனர்.
ஆனால் இந்த மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை வழங்கு பாஸ் செய்துள்ளனர் அந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள். முறையாக அதை திருத்தியதில் அவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள பல்கலைக்கழகம் இரண்டு பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் விசாரித்து வருகின்றனர்.