ஹரியானாவில் பள்ளித் தேர்வு ஒன்றில் மாணவர்களுக்கு கயிறுப் போட்டு ஏறி பலர் பிட்டு பேப்பர்களை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்திய மாநிலங்கள் முழுவதிலும் அதற்கு முன்பாக பள்ளி பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல மாநிலங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில் ஹரியானாவிலும் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
அப்படியாக ஹரியானாவின் நூ பகுதியை சேர்ந்த சந்திரவதி பள்ளியில் தேர்வு நடந்து வந்த நிலையில் இளைஞர்கள் பலர் தேர்வு வினாக்களுக்கான பதில் அடங்கிய பிட்டு பேப்பர்களை தயாரித்து, கஷ்டப்பட்டு கயிறுப்போட்டு ஏறி சென்று வகுப்பு ஜன்னல் வழியாக பிட்டு பேப்பர்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதை அப்பகுதியிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. இவ்வாறு செய்பவர்கள் யாருக்கும் தெரியாமல் வந்து இந்த செயல்களை செய்வது உண்டு. ஆனால் இவ்வளவு கூட்டமாக வந்து கயிறு போட்டு ஏறி இளைஞர்கள் செய்த குரங்கு சேட்டை வேலை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஹரியானா பொதுத்தேர்வில் இந்தி, உருது வினாத்தாள்கள் செல்போனில் லீக் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.