புனேவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், சம்பள பிரச்சினை காரணமாக பணமில்லாமல் பிளாட்பாரத்தில் படுத்துறங்கிய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சௌரவ் மோர் என்ற ஊழியர், புனேவில் உள்ள சஹ்யாத்ரி பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தின் எதிரே உள்ள நடைபாதையில் படுத்து கிடந்துள்ளார்.
தனது கையில் இருந்த ஒரு கடிதத்தில், தனக்கு சேர வேண்டிய சம்பளத்தை நிறுவனம் நிறுத்திவிட்டதால், தங்க இடமில்லாமல் நடைபாதையில் படுத்து கிடப்பதாக அவர் எழுதியிருந்தார்.
ஊடகங்களில் இந்த செய்தி பரவிய பிறகு, நிறுவனம் விளக்கம் அளித்தது. அதில், சௌரவ் மோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடுப்பில் சென்றதாகவும், அந்த நாட்களில் அவருக்கு சேர வேண்டிய ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், அவர் தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பியிருப்பதால், அவருடைய அடையாள அட்டை மீண்டும் செயல்படுத்தப்பட்டு, அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்கள் திடீரென ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.